கேள்வி :
11. சுய முன்னேற்றத்திற்காக முயற்சி செய்யாமல் இறைவனை வணங்கி என்ன பயன் கிடைக்கப் போகிறது?
இத்தகைய கேள்வி பலமுறை பிறர் கூற கேள்விப் பட்டிருப்போம். இறைவனை வணங்குவது என்பதே முயற்சியை துவங்குவதற்கும் அதில் முழுமூச்சாய் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் உதவி புரிகின்றது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தனது இயலாமையை சரி செய்ய இயலாத காரணத்தினால் இறைவன் பார்த்துக் கொள்வார் என பிறர் கூறுவதாக நம்புகிறோம். அவ்வாறு முயற்சி ஏதும் இன்றி இறைவன் பெயரை உச்சரிப்பவர்கள் உண்மையில் இறைநிலையை உணராதவர்கள் என்பதே முற்றிலும் உண்மை.
இறைநிலை என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல அது முழுக்க முழுக்க செயல்பாட்டின் பிரதிபலிப்பு மற்றும் நற்குணநலன்களின் மேம்பட்ட நிலை என்பதை உணர வேண்டும்.
இறைவனை வணங்கி எந்த பயனும் இல்லை என்று பலர் கூறுகின்றனர். தெய்வத்தான் ஆகாது எனினும், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது இறைநிலையை குறைத்து மதிப்பிடுவதற்காக குறிப்பிடப்படவில்லை, ஒருவரின் முயற்சியை கோடிட்டு காண்பதற்கு அவ்வாறு கூறப்பட்டது. எப்படி கருணை மதிப்பெண் பெறாமல் தான் மேற்கொண்ட முயற்சியால் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். அவ்வாறே ஒருவருடைய ஒவ்வொரு முயற்சிக்கும் பலன் உண்டு அதே நேரத்தில் இறைவனை வணங்கி முழுமையான முயற்சியோடு செயல்படும் காரியம் வெற்றியில் தான் முடியும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இறைநிலை என்பது உங்களின் இயலாமையை ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு காண்பித்து மேலும் முன்னேற பிரபஞ்சத்தின் மூலம் பல வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கும். உண்மையாக இறைவன் மீது அன்போ நற்காரியங்களிலோ ஈடுபடாமல் வெறும் பரிகாரங்களையும் தன்னுடைய சுபாவங்களை மாற்றம் செய்யாமல் பயனற்ற காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு அத்தகையை விழிப்புணர்வு ஏற்படுவதில்லை.
இறைநிலை எப்போதும் உங்களை பலவீனப்படுத்தாது, ஆத்ம சக்தியை பலப்படுத்தும் என்பதை முதலில் உங்கள் மனதிற்கு பிரகடனம் செய்யுங்கள்.
எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு இறைநிலையை உணர்வது மட்டுமே. அத்தகைய நிலையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அல்லது கிடைக்கும் சூழல் உருவாகும் அல்லது பிரச்சனையை தெளிவாக கடந்து செல்லும் ஆற்றல் கிடைக்கும். எனவே இறைநிலையை குறைத்து மதிப்பிடுவதோ, நம்பிக்கையின்மை ஏற்படுவதோ உங்களுடைய முயற்சியை குறைக்குமே தவிர அதிகப்படுத்தாது.
எனவே ஒவ்வொரு காரியங்களையும் இறைவன் உங்களிடம் எப்படி விரும்புகின்றாரோ அவ்வாறு செய்ய முற்படுவாராயின் திருப்தியான மனநிலை ஏற்படும் அதன் மூலம் தனக்கும் பிறர்க்கும் நன்மை உண்டாகும் என்பது உறுதி.