பதில் : (Short & Sharp )
கேள்வி :
7. ஆண் மற்றும் பெண் தன்மையின் பொருள் என்ன?
ஆன்மா எந்த உடலில் பிறவி எடுக்கிறதோ அதற்கேற்றார் போல் ஆண் மற்றும் பெண் தன்மைக்குரிய குணங்களை இயல்பாகவே அடைகின்றது. இது உடலைப் பொருத்து தான் தீர்மானிக்கப்படுகிறதே தவிர ஆத்மாவில் ஆண் பெண் என்ற பேதம் கிடையாது.
ஆத்மா எந்த உடலை ஆதாரமாக இப்பிறவியில் எடுக்கிறதோ அதற்குரிய குணாதிசயங்கள் மேலோங்கி நிற்கும், எதிர் பாலின குணங்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் ஆத்மா ஆண்-பெண் என்ற இரு நிலையின் குணங்களை அடையும் போது மட்டுமே முழுமை நிலையை அடையும். அதுவே இறைவனை அடைவதற்கான தன்மையும் ஆகும்.
எனவே தான் ஆண் மற்றும் பெண் உடலில் உள்ள ஆத்மாக்கள் திருமணத்தின் வாயிலாக இணைந்து வாழ்க்கையில் பரஸ்பர குணாதிசயங்களை பகிர்ந்து கொள்வதால் அவ்விரு ஆத்மாக்களும் எதிர்பாலின குணங்களை பெற்று முழுமை நிலையை அடைகின்றன. ஆணின் குணங்களோடு ஒரு ஆன்மா இருந்தாலும் சரி பெண்ணின் குணங்களோடு மட்டுமே ஒரு ஆன்மா இருந்தாலும் சரி அது பூரணம் அடைந்ததாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஆகவே தான் முன்னோர்கள் திருமண நிகழ்வுகளை அமைத்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை தவிர்ப்பதன் மூலம் ஆத்மா அதற்குரிய பூரண நிலையை அடையாமல் அதிருப்தியில் இருப்பது என்பது நற்செயல் அல்ல.
திருமணங்களை வெறுப்பதோ, புறக்கணிப்பதோ முற்றிலும் சரியான செயல் அல்ல. முரட்டு Single என கூறிக் கொள்ளும் மூடர்கள் மூளையில் சற்று இதனைபதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஆனால் இதே குணங்களை திருமணங்கள் வாயிலாக இல்லாமல் இயல்பாகவே இறைவனுடைய அருளால் முழுமை நிலையை அடையும் சில விதிவிலக்கு பெற்ற ஆத்மாக்களும் புவியில் உண்டு. ஆனால் அவர்கள் மிகவும் சொற்பம். அதற்கு வைராக்கியம் நிறைந்த தீவிர முயற்சி அவசியம். ஏனெனில் அந்த ஆத்மா எதிர் பாலினத்தால் கவரப்பட்டு வயோதிக நிலையில் கூட தவறுகளை செய்ய முற்படலாம். எனவே திருமணம் ஆத்மாவிற்கு முழுமை நிலையை ஏற்பட வழிவகை செய்கிறது என்பது முற்றிலும் உண்மை.
அதே நேரத்தில் மூன்றாம் பாலினமான ஆண் உடலில் உள்ள ஆத்மா; பெண்ணினுடைய குணங்களின் சாயலில் இருந்தாலும், பெண் உடலில் உள்ள ஆத்மா; ஆணிற்குரிய குணங்களின் சாயலில் இருந்தாலும் முழுமை நிலையை எளிதாக அடைய இயலும் என்பதை இயற்கையே அவர்களுக்கு அந்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. எனவே அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பது முற்றிலும் உண்மை.
ஆண்-பெண் இருவரில் யார் உயர்ந்தவர் என்று சிந்தனை செய்வது கூட மூடத்தனத்தின் உச்சம் என்றே கூறலாம். ஏனெனில் இறைவனின் படைப்பில் உயர்வு-தாழ்வு என்று எதுவும் கிடையாது. இடத்தைப் பொறுத்து அதன் நிலை மாறுபடும். இது இறைவனின் அனைத்து படைப்புகளுக்கும் பொருந்தும்.
உண்மையில் பெண் என்பவர் புனிதத்தின் அடையாளமாக போற்றப்படுகிறார். ஆண் என்பவர் ஆளுமைத் தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். ஆணாக இருப்பவர் பெண்ணைப் போல நடவடிக்கைகளை விரும்புவதும், பெண்ணாக இருப்பவர் ஆண்களைப் போன்று நடவடிக்கைகளை விரும்புவதும் அந்தந்த பாலின தன்மைகளை கெடுத்துக்கொண்டு அதனுடைய ரசனையை அனுபவிக்க முடியாமல் இழப்பதற்கு சமம். இது கலியுகத்தில் வேடிக்கையான விஷயம். இவை மீண்டும் வரக்கூடிய புதுயுகத்தில் அதன் உண்மை நிலையை அடையும் என்பது சத்தியம். ஒவ்வொருவரும் அவருடைய தற்போதைய குணங்களில் இருந்து மேன்மை அடைய வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாக உள்ளது. நன்றி. வாழ்த்துக்கள்...
கேள்வி :
8. சிவராத்திரி மற்றும் வைகுண்ட ஏகாதேசி ஆகிய தினங்களில் கண்விழித்தல் அவசியமா? அதன் பொருள் என்ன?
சிவன் என்றால் என்றும் நன்மையே செய்பவர் என்பதே அதன் பொருள். அவருக்கு உருவம் கிடையாது. ஜோதி சொரூபமானவர். பிறப்பு இறப்புக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். இந்த ஜோதியைத்தான் பல்வேறு மதங்களில் வெவ்வேறு பெயர்களில் இறைவனை அழைக்கின்றனர். ஆனால் Supreme Father ஒருவர் தான். தலையில் கங்கையுடன் பாம்பின் தோற்றத்தோடு காட்சியளிப்பவர் சங்கரர், அவர் சிவன் கிடையாது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சிவன் இரவு நேரத்தில் அவதரிப்பதாகவும், அந்நேரத்தில் கண்விழித்து வழிபாட்டில் ஈடுபட்டால் அதீத சக்திகள் கிடைக்கும் என்றும்; கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருகின்றன அதனால் சக்திகள் அதிகம் கிடைக்கும் என்றும்; உடலில் இருக்கக்கூடிய குண்டலினி சக்தி மேலோங்கி ஆற்றல் அதிகரிக்கும் என்றெல்லாம் மனிதர்களால் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் சிவன் இரவு நேரத்தில் அவதரிப்பது அல்ல.
இரவு நேரம் என்றால் இருட்டு என்பது பொருள் அல்ல. கலியுகத்தின் தற்சமயம், அதர்மம் தலை தூக்கி இருள் போன்று இருக்கக்கூடிய இந்த சமயத்தில் இறைவன் உண்மையான ஞானத்தை கொடுத்து ஆன்மாக்களை தூய்மை படுத்தக் கூடிய காரியத்தை செய்கின்றார்.
ஆகவே தற்சமயம் இருள் போல துர்காரியங்கள் நிறைந்து இருக்கக்கூடிய சமயத்தில் நாம் யாருக்கும் துக்கம் கொடுக்காது, தீய காரியங்களில் ஈடுபடாது விழிப்புணர்வோடு இருந்து நற்காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். மாறாக கண்விழிப்பதால் எப்பயனும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கண்விழித்து இறைநினைவில் வழிபாடுகள் செய்யலாம்.
ஆனால் இன்றைய தினத்திற்கு என்று மகிமை உள்ளது. அனைவரும் சேர்ந்து குழுவாக இறைவனை வழிபாடு செய்வதற்கு உகந்த தினமாகவும் இது அமைந்து விடுகிறது என்பதால் இதற்கு தனிச் சிறப்பு உண்டு.
நீண்ட நேரம் இறைவனுடைய சிந்தனையில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு பின்னர் நீங்கள் உறங்க செல்லலாம். விடியும் வரை விழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பின்பு அதிகாலை எழுந்து இறைவனை நீங்கள் நினைவு செய்யலாம் என்பதே உண்மை.
இறைவன் யாரையும் உடல் ரீதியாக வற்புறுத்திக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால் தன்னுடைய முழு அறிவையும் பயன்படுத்தி தன்னுடைய குணங்களை மேன்மை அடையக்கூடிய செயலில் மனிதர்கள் ஈடுபட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வைகுண்ட ஏகாதேசி அன்று இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் இறைவனை வழிபட்டால் சொர்க்கம் சென்று விடலாம் என்ற நம்பிக்கையும் மனிதர்களிடையே காணப் படுகின்றது. இதற்கும் பொருள் இதனிலேயே அடங்கியுள்ளது. சொர்க்கம் என்பது விரைவில் இந்த முழு உலக விநாசத்திற்கு பின்னர் உருவாக இருக்கின்றது. தற்போது விழிப்புணர்வோடு நற்காரியங்களில் ஈடுபட வேண்டும், இருள் போன்ற இந்த கலியுகத்தில் கண் விழிப்பதல்ல, நற்காரியங்களை விழிப்புணர்வோடு செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள். அப்படி செய்தால் அந்த ஆத்மா சொர்க்கம் சென்றடையும். அதற்குரிய தகுதி தற்போது தீர்மானிக்கப்படுகின்றது.
வெறுமனே கண்விழிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை அதற்கு சொற்ப பலனே உண்டு என்பதை உணர வேண்டும். நன்றி. வாழ்த்துக்கள்...
கேள்வி :
9 . வாழ்வின் பொருள் என்ன? ஏன் வாழ்கிறோம்?
இது வெறுப்பு உணர்வோடு சிந்திக்க வேண்டிய கேள்வி அல்ல, மகிழ்ச்சியோடு அணுக வேண்டிய கேள்வி.
முதலாவதாக வாழ்வின் பொருள் என்பது ஆன்மா அதன் உன்னதமான, பரிபக்குவ இறைநிலையை (தெய்வீக குணங்கள், கலைகள் மற்றும் சக்திகள் நிறைந்த நிலை)அடைய வேண்டும் என்பதாகும்.
மேற்கூறிய முழுமை நிலையை ஆன்மா அடைவதற்கு தினம்தோறும் எடுக்கக்கூடிய முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் முக்கிய காரணியாக அமைகின்றது.
எனவே இதற்கு முன்னர் எடுத்த பிறவிகளினுடைய விதியின் கணக்கீடுகள் அனைத்தையும் தற்போதைய பிறவியின் மூலம் கிடைக்கப்பெற்ற உடல், ஆரோக்கியம், குடும்ப அமைப்பு, வேலை, சந்திக்கக்கூடிய நபர்கள் மற்றும் இயற்கை மூலமாக சரி செய்வதற்கு விதியே ஒரு வாய்ப்பை ஒவ்வொரு நாளும் வழங்குகிறது.
இறைவன் ஒவ்வொரு நாளையும் ஏதாவது மாற்றம் செய்து ஆன்மாவை பரிபக்குவ நிலையை அடைவதற்கான வாய்ப்பையும், உதவியையும் வழங்குகின்றார். அந்த நிலைக்காகவே நாம் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இல்லற வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்வதன் மூலமே அந்த நிலையை அடைய முடியும். இல்லறத்தை செவ்வனே நடத்திச் செல்வதற்கான வாய்ப்பை இறைவன் ஒவ்வொரு நாளும் வழங்குகின்றார்.
இல்லறத்தில் இல்லாவிட்டாலும் அந்த நிலையை அடைய முடியும் ஆனால் அதற்கு தைரியமும், மிகுந்த முயற்சியும் அவசியம். ஞானியாக இருந்தாலும் தவறிழைப்பது என்பது அனைவருக்கும் இயல்பு. தனது குணங்களை தெய்வீக தன்மையை நோக்கி முயற்சி செய்யாமல் சுகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதும் தவறான வாழ்க்கை முறையே ஆகும்.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெற்று செல்வ செழிப்போடு குடும்ப வாழ்க்கையை நான் அனுபவித்து வருகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தால்; இறைவன் அனைத்தையும் உங்களுக்கு கொடுத்து உங்களை சோதிக்கிறான் என்றே பொருள். நீங்கள் நற்காரியங்களை பிறருக்கு செய்வதில் வழங்குவதில் அதனை பயன்படுத்தி ஆக வேண்டும். இல்லையெனில் அடுத்த பிறவியில் உங்களுடைய நிலை கீழானதாக சென்று விடும்.
ஒருவேளை செல்வ செழிப்பு கிடைக்கப் பெறாதவர் எனில் உங்களுக்கு கிடைத்தவற்றை வைத்து மன நிறைவோடு ஒவ்வொரு நாளையும் பரிபக்குவ நிலைக்கு முயற்சி செய்ய வேண்டும்
எனவே ஏற்கனவே உள்ள பழைய கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக பயன்படுத்தும் இந்த பிறவியில் தனது தவறான செயல்பாடுகளினால் (காமம், கோபம்,பேராசை,பற்று,அகங்காரம்,அலட்சியம், சோம்பேறித்தனம்...) மீண்டும் கணக்கை அதிகப்படுத்திக் கொள்ளாமல் நற்காரியங்களில் ஈடுபட்டு உன்னத நிலையை அடைவதற்காகவே நாம் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
கேள்வி :
10 . தீய பழக்கவழக்கங்கள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை தான் மகிழ்ச்சியைத் தருகின்றதா? அவ்வாறு இல்லையெனில் வாழ்வதே பயனற்றதா?
எந்த கெட்ட பழக்கமும் இல்லை எனில் வாழ்ந்து என்ன பிரயோஜனம் என திரைப்பட வசனங்களில் நாம் கேள்விப்பட்டது உண்டு. உண்மையில் தீய பழக்க வழக்கங்கள் மற்றும் பகட்டான வாழ்க்கையே மகிழ்ச்சியை தீர்மானிக்கிறதா என்றால் இல்லை உங்கள் மனதை நீங்கள் அவ்வாறு பழக்கப்படுத்தி விட்டீர்கள் என்பதே அதற்கான பதில்.
குழந்தை பருவத்தில் சிறு சிறு விஷயங்களில் மிகப்பெரிய அளவு மகிழ்ச்சியை அனுபவம் செய்த நாம், வளர வளர நம்முடைய மகிழ்ச்சியை வேறு வேறு விஷயங்களுக்கு மாற்றி விட்டதன் விளைவே மகிழ்ச்சியை தொலைத்ததற்கு அடிப்படை காரணம்.
குழந்தைப் பருவத்தில் எந்த ஒரு வீண் சிந்தனையோ, கெட்ட பழக்கங்களோ, ஆடம்பரமான வாழ்க்கை முறையோ எதுவுமே அந்த குழந்தைக்கு தெரிவதில்லை எனவே அன்றாட வாழ்வில் நடைபெறும் சிறு சிறு செயல்பாடுகளில் மனமானது மிகுந்த மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறது. அவ்வப்போது வருத்தம் ஏற்பட்டாலும் அதை உடனடியாக மறந்து மகிழ்ச்சி நிலைக்கு மனமானது திரும்பிவிடும்
சிறு சிறு பதார்த்தங்கள் சாப்பிடுவது, நிறங்களை பார்ப்பது, சின்ன சின்ன பொருட்களை வைத்து விளையாடுவது, ஓடுவது, ஆடுவது,பாடுவது,நீரில் விளையாடுவது இவற்றில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவம் செய்த நாம், வளர வளர நம் மனநிலையை மாற்றிக்கொண்டோம். அதற்காக அவற்றையெல்லாம் வயது வந்த பின்னர் செய்ய வேண்டும் என்பதல்ல அதை ரசிக்க வேண்டும் அதையும் நாம் மறந்து விட்டோம்
மதுவில் கிடைக்கும் போதை மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆடம்பரமான உணவு சாப்பிடுவதில் மகிழ்ச்சி இருப்பதாகவும், மற்றவர்கள் தன்னை பார்த்து பொறாமைப்படும் வண்ணம் தன்னுடைய நடை, உடை, அலங்காரங்களை மாற்றிக் கொள்வதன் மூலமும், புதுப்புது இடங்களுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வதன் மூலமும் மகிழ்ச்சியை பிடித்துக் கொண்டு விட்டோம். இந்த மகிழ்ச்சியானது அல்ப காலத்திற்கானது பிறகு நீர்க்குமிழி போல அழிந்து விடும்.
அனைத்து சுகங்களையும் அனுபவித்து விட்டேன், அடைந்து விட்டேன் என்று சிந்தனை செய்து கொள்வதும் கூட அறியாமையின் உச்சம் என்றே கூறலாம். சிலர் என் வாழ்க்கை முழுவதும் நான் எதையும் அனுபவிக்காமல் கஷ்டங்களையே அனுபவித்து வாழ்க்கையில் பயணித்து விட்டேன் என தன்னைத்தானே நொந்து கொள்பவர்களும் உண்டு. தீய பழக்கங்கள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்தால் தான் மகிழ்ச்சி என்று இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தீய பழக்கங்களில் இருந்து உங்களுடைய மனம் விடுபடும் பொழுது, மிகப்பெரிய பேரானந்தத்தை எப்பொழுதும் அனுபவம் செய்யும். எளிமையான வாழ்க்கை முறையில் மனம் ஒன்றி போய்விடும். இயல்பான உணவு பதார்த்தங்களில் மனமானது மூழ்கி போய்விடும். ஆனால் அவ்வாறு உள்ளவர்களை வாழ்வை ரசிக்க தெரியவில்லை, வாழத் தெரியவில்லை என்று நாம் கூறுகின்றோம். உண்மையில் ஒவ்வொரு நொடியும் அளவு கடந்த மகிழ்ச்சியை அனுபவம் செய்பவர்கள் அந்நிலையை அடைந்தவர்கள் மட்டுமே.
அந்த நிலையை அடைவதற்கு சரியான இறைநிலை பாதையில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். அப்படி ஒரு நிலையை அனுபவம் செய்துவிட்டால் வெளி விஷயங்கள் எதுவும் உங்களுடைய மகிழ்ச்சியை தீர்மானிக்காது.
எதுவும் இல்லை என்றாலும் அளவற்ற மகிழ்ச்சியில் எப்போதும் மூழ்கி இருப்பீர்கள். இறைவனும் இயற்கையும் எப்போதும் பேரானந்தத்தை அள்ளித் தந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் வந்தாலும் அதனை அனுபவம் செய்யாது ஒரு நொடியில் மீண்டு விடுவீர்கள் என்பது சாத்தியமான ஒன்று.
இதுவே ஆத்மாவின் தூய்மையான நிலை என்று கூறப்படுகின்றது. இந்நிலை குழந்தை தன்மை மற்றும் இறைத்தன்மையின் நிலையே ஆகும்