பதில் : (Short & Sharp )
கேள்வி :
9 . வாழ்வின் பொருள் என்ன? ஏன் வாழ்கிறோம்?
இது வெறுப்பு உணர்வோடு சிந்திக்க வேண்டிய கேள்வி அல்ல, மகிழ்ச்சியோடு அணுக வேண்டிய கேள்வி.
முதலாவதாக வாழ்வின் பொருள் என்பது ஆன்மா அதன் உன்னதமான, பரிபக்குவ இறைநிலையை (தெய்வீக குணங்கள், கலைகள் மற்றும் சக்திகள் நிறைந்த நிலை)அடைய வேண்டும் என்பதாகும்.
மேற்கூறிய முழுமை நிலையை ஆன்மா அடைவதற்கு தினம்தோறும் எடுக்கக்கூடிய முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் முக்கிய காரணியாக அமைகின்றது.
எனவே இதற்கு முன்னர் எடுத்த பிறவிகளினுடைய விதியின் கணக்கீடுகள் அனைத்தையும் தற்போதைய பிறவியின் மூலம் கிடைக்கப்பெற்ற உடல், ஆரோக்கியம், குடும்ப அமைப்பு, வேலை, சந்திக்கக்கூடிய நபர்கள் மற்றும் இயற்கை மூலமாக சரி செய்வதற்கு விதியே ஒரு வாய்ப்பை ஒவ்வொரு நாளும் வழங்குகிறது.
இறைவன் ஒவ்வொரு நாளையும் ஏதாவது மாற்றம் செய்து ஆன்மாவை பரிபக்குவ நிலையை அடைவதற்கான வாய்ப்பையும், உதவியையும் வழங்குகின்றார். அந்த நிலைக்காகவே நாம் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இல்லற வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்வதன் மூலமே அந்த நிலையை அடைய முடியும். இல்லறத்தை செவ்வனே நடத்திச் செல்வதற்கான வாய்ப்பை இறைவன் ஒவ்வொரு நாளும் வழங்குகின்றார்.
இல்லறத்தில் இல்லாவிட்டாலும் அந்த நிலையை அடைய முடியும் ஆனால் அதற்கு தைரியமும், மிகுந்த முயற்சியும் அவசியம். ஞானியாக இருந்தாலும் தவறிழைப்பது என்பது அனைவருக்கும் இயல்பு. தனது குணங்களை தெய்வீக தன்மையை நோக்கி முயற்சி செய்யாமல் சுகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதும் தவறான வாழ்க்கை முறையே ஆகும்.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெற்று செல்வ செழிப்போடு குடும்ப வாழ்க்கையை நான் அனுபவித்து வருகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தால்; இறைவன் அனைத்தையும் உங்களுக்கு கொடுத்து உங்களை சோதிக்கிறான் என்றே பொருள். நீங்கள் நற்காரியங்களை பிறருக்கு செய்வதில் வழங்குவதில் அதனை பயன்படுத்தி ஆக வேண்டும். இல்லையெனில் அடுத்த பிறவியில் உங்களுடைய நிலை கீழானதாக சென்று விடும்.
ஒருவேளை செல்வ செழிப்பு கிடைக்கப் பெறாதவர் எனில் உங்களுக்கு கிடைத்தவற்றை வைத்து மன நிறைவோடு ஒவ்வொரு நாளையும் பரிபக்குவ நிலைக்கு முயற்சி செய்ய வேண்டும்
எனவே ஏற்கனவே உள்ள பழைய கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக பயன்படுத்தும் இந்த பிறவியில் தனது தவறான செயல்பாடுகளினால் (காமம், கோபம்,பேராசை,பற்று,அகங்காரம்,அலட்சியம், சோம்பேறித்தனம்...) மீண்டும் கணக்கை அதிகப்படுத்திக் கொள்ளாமல் நற்காரியங்களில் ஈடுபட்டு உன்னத நிலையை அடைவதற்காகவே நாம் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பல்வேறு புத்தகங்கள் மற்றும் முன்னோர்களின் வார்த்தைகள் மூலம் தொகுக்கப்பட்டவை.
இதில் கருத்து வேறுபாடு இருப்பின் தங்களது கருத்துக்களையும் கண்டனங்களையும் கீழ்க்கண்ட Whatsapp எண்ணிற்கு (9943040503) அனுப்பி சிந்தனைக்குரிய நேரத்தை சிறப்பாக மாற்றிக்கொள்வோம் வாருங்கள்...
உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி பொறுமையுடன் வாசித்த உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த சிந்தனை உங்களுடைய வாழ்வில் சிறப்பை ஏற்படுத்தட்டும்.
மிக்க நன்றி...