கேள்வி :
நான் யார்? என்னுடைய ரூபம் மற்றும் காரியம் என்ன?
நீங்கள் ஓர் ஆத்மா. இரு புருவங்களுக்கு மத்தியில் கண்களுக்குப் புலப்படாத ஒளிப்புள்ளி வடிவானவர் நீங்கள்.
நீங்கள் இந்த உடலில் வசித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த உடல் நீங்கள் அல்ல. உடலின் மூலம் காரியங்களை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
மனம், புத்தி, சுபாவம் இவையே ஆத்மாவின் அடிப்படை சூட்சம சக்திகள்.
மனம் - எண்ணங்களை எழுப்புவது
புத்தி - முடிவெடுப்பது
சுபாவம் - குணங்களை பதிவு செய்வது
ஆத்மாவில் ஆண் பெண் என்ற பேதம் கிடையாது . ஆத்மா உடலில் பிரவேசிக்கும் போது மட்டுமே, உடலின் அடிப்படையில் ஆண் பெண் என்ற வேறுபாடு ஏற்படுகிறது. பொதுவாக ஆன்மாவில் ஆணுக்குரிய குணங்களும் பெண்ணுக்குரிய குணங்களும் நிறைந்து இருக்கும்.
தற்போது நீங்கள் எந்த உடலில் இருக்கின்றீர்களோ அதற்குரிய குணநலன்கள் மேலோங்கியிருக்கும். இது ஒவ்வொரு ஆத்மாவிற்கும் ஆண் பெண் தன்மை என்பது சதவீதத்தில் வேறுபாடு இருக்கும்.
ஆத்மா அழிவற்றது. உடல் அழியக்கூடியது.
ஆத்மா உடலை விட்டுப் பிரிந்த பின்னர், மீண்டும் இரண்டு அல்லது மூன்று மாத தாயின் கருவறையில் பிரவேசம் செய்கிறது. (பிறவிகள் பற்றி பின்னர் பார்க்கலாம்)
கேள்வி :
2. இறைவன் யார்? அவருடைய ரூபம் மற்றும் காரியம் என்ன?
நீங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர் இல்லை எனில் உங்களுடைய விஞ்ஞான அறிவு பாராட்டுக்குரியது. நீங்கள் பின் தொடர்ந்து வாசிக்க வேண்டிய அவசியமில்லை. (நம்பிக்கை கொண்டவராயின் பின் தொடரலாம்)
ஆன்மாவைப் போன்றே இறைவனும் ஒளிப்புள்ளி வடிவானவர், இறப்பு-பிறப்பு இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவர். எப்போதும் தூய்மையானவர் அனைத்து குணங்களும் சக்திகளும் நிறைந்தவர். அவரைத்தான் பரமாத்மா, சிவன், கிறிஸ்து, அல்லாஹ், யஹோவா என மனிதர்கள் வெவ்வேறு மதங்களில் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்.
இறைவன் என்பவர் பொருளா? உணர்வா? மனிதரா? என்று சிந்திப்பீர்களானால் இறை என்பது ஒரு சக்தி. பொருள் அல்ல, உணர்வும் அல்ல, மனிதரும் அல்ல என்பதே உண்மை. உயிரும் உணர்வும் நிறைந்த ஒளியின் வடிவம், சக்தியின் பிறப்பிடம். ஒளிக்கு வேதியியல் வடிவம் கிடையாது. அது போல சக்தியின் உருவம் மற்றும் இருப்பிடம்.
இதில் என்னுடைய தெய்வம் உயர்ந்தது நான் வணங்கும் கடவுள் உயர்ந்தவர் என்று சிந்திக்கும் மனிதர்கள் அறியாமையின் உச்சத்தில் உள்ளவர்கள்
நீங்கள் எந்த மதத்தினராவும் இருக்கலாம் ஆனால் இறைவன் உங்கள் மதத்தை மட்டும் சார்ந்தவர் அல்ல, அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவர் என்பதை மறந்து விடக்கூடாது. நீங்கள் மட்டும் உரிமை கொண்டாட முடியாது.
1. இறைவன் அல்லது கடவுள்
2. தெய்வங்கள்
3 . குலசாமி
இவை மூன்றுமே தனிப்பட்டது. கடவுள் எப்போதும் ஒருவர் மட்டும்தான். ஒளிப்புள்ளி வடிவானவர்
மனிதர்கள் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப, அவர்கள் வாழும் இடத்திற்கேற்ப, அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப பல்வேறு விதமாக தெய்வங்களை படைத்து விட்டார்கள். இவற்றில் தவறில்லை ஏனெனில் அது அவர்கள் நம்பிக்கை சார்ந்தது.
இறைவன் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான் அது ஆத்மாவில் நிறைந்திருக்கும் தூய்மை, சக்தி மற்றும் குணங்களின் முழு வடிவம் மட்டுமே.
ஆத்மா உடலில் பிரவேசமாகி பல பிறவிகளாக காரியங்களை செய்யும்போது விகார குணங்களுக்கு வசப்பட்டு, மேற்குறிப்பிட்ட சக்திகளை இழந்து விடுகிறது. அதை மீண்டும்100% மாற்றி , சொர்க்கம் அழைத்துச் செல்வதற்கு விதியின் மூலமாக வாய்ப்பைம் வழியையும் ஏற்படுத்தித் தருவது அவருடைய காரியமாகும்.
இவை அனைத்தையும் இறைவன் மனிதர்களிடம் வந்து நேரில் கூறப்போவதில்லை. நீங்கள்தான் இறைவனை தேடி அலைந்து இதனை கண்டறிய வேண்டும். அதற்கு எல்லாவிதத்திலும் இறைவனும் இயற்கையும் உங்களுக்கு வழியை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதே முற்றிலும் உண்மை.
( இறைவன் பற்றிய மனிதர்களின் தவறான கண்ணோட்டத்தைப் பற்றி பின்னர் பார்க்கலாம்)
கேள்வி :
3. இறைவன் மற்றும் ஆத்மாவின் இருப்பிடம் என்ன? ஆத்மா இறைவனை எப்போது சென்றடையும் ?
இறைவன் அனைத்து இடங்களிலும் இருக்கின்றார் என்பது நம்பிக்கை தானே தவிர, உண்மை அல்ல. நம்பிக்கை என்பது வேறு, உண்மை என்பது வேறு.
எப்படி சூரியன் வெகு தொலைவிலிருந்து அதன் சக்திகளை இந்த பிரபஞ்சத்திற்கு முழுவதும் அனுப்புகிறதோ , அதுபோல இறைவனும் இந்த பிரபஞ்சத்தில் இருந்து வெகு தொலைவில் அமைதியான உலகில் இருக்கின்றார். அதற்கு ஆத்ம லோகம், பிரம்மலோகம், சாந்தி தாமம் என்று குறிப்பிடப்படுகின்றது.
ஆத்மாவின் இருப்பிடமும் அதுவேயாகும். ஆத்மாவின் சுய தர்மமே சாந்தி. ஆகவே தான் அமைதி நிலையில் மட்டுமே ஆத்மா திறன்பட, செயல்பட இயலும். ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், செயல்படுத்தவும் ஆத்மீக அமைதி அவசியமாகின்றது.
நீங்கள் இறைவனுடைய சக்தியை எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நேரத்திலும் (24x7) அனுபவம் செய்ய இயலும். அதற்கு ஆத்ம அமைதி ஏற்பட்டால் மட்டுமே அது சாத்தியம்.
அறிவியலும் ஒரு நாள் இதை உறுதிப்படுத்தும், அதற்கு இன்னும் பல காலங்கள் தேவைப்படலாம். அறிவியலும் ஆன்மீகமும் வாழ்வில் பிரிக்க முடியாதவை.
உடலை விட்டு செல்லும் ஆத்மா இறைவனின் அன்பையும் சக்தியையும் அதிகம் அனுபவம் செய்யும். பின்னர் அடுத்த பிறவிக்கு உடனே சென்றுவிடும். மனித உடலை விட்டு செல்லும் ஆத்மா மீண்டும் மனிதனாகத்தான் பிறவி எடுக்குமே தவிர, வேறு ஜீவராசிகள் ஆக பிறவி எடுப்பதில்லை என்பதே உண்மை.
சில மதங்கள், இந்த பிறவியைத் தவிர வேறு பிறவி கிடையாது, இறுதி சமயத்தில் இறைவன் உயிர்ப்பிப்பார் என கூறுகின்றன. அதன் நோக்கமே வாழும் காலத்தில் எந்த தவறும் செய்துவிடக் கூடாது. அடுத்து தன்னை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை என்று அறுதியிட்டு தெரிவிப்பதற்காகத் தான் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிறவிகள் இல்லை என்று ஆகி விடாது.
உலகத்தினுடைய மகா விநாசம் ஏற்படும் சமயத்தில் தான், அனைத்து ஆத்மாக்களும் மீண்டும் ஆத்மலோகத்திற்கு திரும்பும். அதுவரை இப்புவியில் பிறவிகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கும். இது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
சொர்க்கம் என்று வான்பரப்பில் ஏதும் இல்லை. தற்போதைய உலகம் நரகமாகும். சொர்க்கத்திற்கு இறைவன் தற்போது மனிதர்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.
உடலை விட்டு சென்ற யாரும் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது ஏனெனில் சொர்க்கம் இன்னும் உருவாகவில்லை. (சொர்க்கம் மற்றும் பிறவிகள் பற்றி பின்னர் பார்க்கலாம்)
கேள்வி :
4. விதியின் அமைப்பு மற்றும் செயல்பாடு எத்தகையது? மேலும் அதன் அற்புதம் மற்றும் ஆச்சரியம் என்ன?
மரத்துடன் ஒப்பீடு
ஆத்மாவில் ஒருவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் குணங்கள் வடிவில் பதிவாகின்றது. அவை இந்த பிரபஞ்சத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது.
உலகில் உள்ள அத்தனை கோடி ஆத்மாக்களின் செயல்பாடுகளையும் பாவம், புண்ணியம் என்ற வகையில் கணக்கீடு செய்து அதற்கேற்ப அடுத்தடுத்த பிறவிகளில் அமைவிடம் மற்றும் தன்மை அமையுமாறு அதற்குரிய நன்மை தீமைகளையும் டிஜிட்டல் வடிவில் நடைமுறைப்படுத்தும் ஒரு மென்பொருள் வடிவமே விதி.
விதியை மதியால் வெல்ல முடியுமா என்றால் முடியும் அதை இறைவன் துணை இன்றி, உறுதியான மன ஆற்றல் இன்றி எளிதாக நடக்காது. விதி அல்லது நாடகத்தில் ஒவ்வொரு தருணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
விதியில் நடப்பவை அனைத்தும் நன்மைக்கே. ஒரு புள்ளி அளவு கூட தீமையின் வடிவம் கிடையாது என்பதை நாம் ஆத்மாவிற்கு புரிய வைக்க வேண்டும்
இந்த உலக வாழ்வின் விதியானது நான்கு யுகங்களாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது. சத்யுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம். தற்போது கலியுகத்தின் இறுதி சமயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
உலகமானது 5000 வருடத்திற்கு ஒரு முறை மிகப் பெரிய ஒரு மாற்றத்தை அடைகின்றது. அதில் முதல் 2500 வருடங்கள் சுவர்க்கம் என்றும் பின்னர் வரக்கூடிய 2500 வருடங்கள் நரகம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது நரகத்திற்குரிய சமயம் முடிவடையப் போகின்றது.
இந்த சமயத்தில் யார் சிறந்த செயல்களின் மூலம் தன்னுடைய குணங்களை மேம்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த நிலையை எட்ட முடியும். பணம், பதவி படைத்தோர் அவ்விடத்தை நெருங்கக் கூட முடியாது.
மேலும் 33 கோடி ஆன்மாக்களுக்கு மட்டுமே அங்கு இடம் ஒதுக்கப்படுகின்றது. இவை குணங்களின் cut off வடிவில் கணக்கிடப்படுகின்றது. அதுவே நியாயத்தீர்ப்பு/ இறுதித் தீர்ப்பு என்றும் கூறப்படுகின்றது.
நல்லவர்களை காணவில்லை என்று மனிதர்கள் புலம்புவதை பார்த்திருக்கிறோம். அதற்கு காரணம் நீங்கள் நல்லவர்களை இப்போதுவரை சந்திக்கவில்லை என்று தான் பொருள். மேலும் நீங்களும் நல்லவராக இன்னும் மாறவில்லை என்பதும் அதனுடைய அர்த்தமே.
ஆனால் இவ்வுலகில் 33 கோடி தூய்மையான ஆத்மாக்கள் வெவ்வேறு வடிவங்களில் மனிதர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை காண்பது அரிது . மேலும் அவர்களுடைய வாழ்க்கை தனிப்பட்டதாக முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். உங்களுடைய செயல்பாடுகள் இறைவன் வரையறுக்கும் வகையில் இருக்குமேயானால் அதில் ஒரு இடம் உங்களுக்கு உண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆத்மாவில் குணங்களையும் சக்திகளையும் நிறைத்து, தீய குணங்களில் இருந்து விடுவித்து, சொர்க்கத்திற்கு தகுதியுடையவராக மாற்றுவதே இறைவனின் உன்னத காரியமாகும். தற்போது அந்த காரியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை, நம்பாவிட்டாலும் அந்த உண்மை ஒருநாள் உலகம் அறியும்.
இதில் பல ரகசியங்களை இறைவன் மறைத்து வைத்துள்ளார். நீங்கள் அந்த அதிர்வெண் அலைகளுக்குச் செல்லும்போது அவற்றை உள்வாங்கிக் கொள்ள இயலும், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
விதியில் நடப்பவை ஒவ்வொன்றும் சுவாரசியமும் ஆச்சரியமும் ஆனந்தமும் கொள்ளக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டால் இவ்வுலக வாழ்க்கையில் இருந்து உங்கள் மனம் எளிதாக விடுபட்டு விடும். ஆனால் அதற்கு மிகுந்த முயற்சி வேண்டும்.
(நற்குணங்களை அழிப்பது எது என்பதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்)
கேள்வி :
5. மனித குலம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் மற்றும் தற்போதைய சூழலில் நற்செயல்களை செய்யமுடியாமல் இருப்பதற்கும் காரணம் என்ன?
மனிதனிடம் உள்ள ஐந்து விகார குணங்கள் தான் இதற்கு அடிப்படைக் காரணம்.
1. காமம் 2. கோபம் 3. பேராசை
4. பற்று(மோகம் ) 5. அகங்காரம்
இந்த ஐந்து விகார குணங்களும் ஐந்து தலை கொண்ட பாம்பிற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. எப்படி பாம்பின் விஷம் உடலை செயலிழக்கச் செய்கிறதோ, அதுபோல இந்த ஐந்து விகார குணங்களின் சதவீதம் உயரும் பொழுது நற்குணங்களை ஆத்மாவால் கிரகிக்க முடியாமல் மூர்ச்சையாகிப் போய்விடுகின்றது.
அனைத்து ஆத்மாக்களும் இந்த அறிவை அடிப்படையாகவே பெற்றுள்ளன. பிறவிகள் மற்றும் அமைவிடம் சார்ந்து இந்த ஐந்து விகார குணங்களின் சதவீதம் உச்சநிலையை அடையும்.
இவை தவிர்த்து , 1. பயம் 2. சோம்பேறித்தனம் 3.அலட்சியம் மூன்றும் அந்த பெரிய நுழைவு வாயிலுக்கு செல்லும் சிறிய நுழைவுவாயில் பகுதியாகும். விகார குணங்களில் செல்லச் செல்ல ஆத்மா அதன் அடிப்படை சக்தியை இழந்து விடும். நற்குணங்களை கிரகிக்கும் தன்மை நின்றுவிடும்.
மேலும் அந்த ஆத்மா கெட்ட காரியங்களை செய்து பாவ நிலைக்கு தள்ளப்படும். இவற்றில் இருந்து விடுபடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. எவ்வளவு பெரிய மகான் ஆத்மாவாக இருந்தாலும் முதலில் (காமம், அகங்காரம்) போன்ற விகாரங்களில் அடிவாங்கிவிடும். இந்த 5 விகார குணங்களில் உங்களின் சதவீதத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மேலும் இவை சூழ்நிலைக்கு ஏற்ப மிகுதியாக வெளிப்படும்.
பலர் இந்த விகார குணங்களில் புழுவைப்போல் உழன்று கொண்டு பேரானந்தமாக அனுபவம் செய்கின்றனர். இன்றைய டிஜிட்டல் உலகில் இந்த விகார குணங்களில் இருந்து விடுபட்டு தன்னை பாதுகாப்பாக வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் இறைவனின் துணையை அனுபவம் செய்யும் போது மட்டுமே அது சாத்தியமாகும் . அதற்கு மிகுந்த முயற்சி அவசியம்.
இதுவே மனிதர்கள் நற்காரியங்களை செய்ய தடையாகவும் கடினமாகவும் இருப்பதற்கு காரணம். இன்றைய ஃபேஷன் மற்றும் டிஜிட்டல் உலகில் திரும்பிய பக்கமெல்லாம் காமம், பேராசை, அகங்காரம், கோபம், மோகம் இவை நிறைந்து கிடக்கிறது. இவற்றில் இருந்து விடுபடுவது உங்கள் கைகளில்தான் உள்ளது.
ஒரு மனிதன் ஆடம்பர வாழ்வை பிறர் முன்னால் பகட்டாக வாழ நினைக்கும் போது, இந்த விகார குணங்கள் எளிதாக தொற்றிக் கொள்ளும். கொரோனா வைரஸை விட மிகவும் வேகமாக பரவக்கூடியது இந்த விகார குணங்கள் ஆகும். இவற்றில் இருந்து தன்னை காத்துக் கொண்டு நற்காரியங்களில் ஈடுபடுவதே இறைவனின் விருப்பமாக உள்ளது. அவ்வாறு விகார குணங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பொழுது ஆத்மா உன்னத நிலையை தெய்வீகத் தன்மையை அடைகின்றது என்பதே சத்தியம்.
( நல்லவை செய்பவர்களுக்கு துன்பம் அதிகமாகவும், தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இன்பம் அதிகமாகவும் வருவதற்கு காரணம் என்ன என்பது பற்றி பின்னர் பார்க்கலாம்)